Friday, June 7, 2013

முஸ்லிம் விவாகரத்து நடைமுறை:சான்றிதழ் வழங்கும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்க கோரி வழக்கு!

                                6 Jun 2013 divorce
 
     சென்னை:முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான பதர் சயீத் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பது: ”விவாகரத்தைப் பொறுத்தவரை மற்ற மதங்களைச் சார்ந்த பெண்களுக்குப் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளன. ஆனால் ஒரு முஸ்லீம் கணவர் தன்னிச்சையாக விவாகரத்து செய்துவிட முடியும். இது குறித்த சட்டங்கள் முறைப்படுத்தப்படவில்லை. ஷாரியா தொடர்பான சட்டம் செல்லாது என முன்னர் 2002ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, அம்மனு நிராகரிக்கப்பட்டது.
 
     ஆனால் அப்போது நீதிமன்றம் தலாக் சொல்லுவதற்கு போதுமான முகாந்திரம் வேண்டும். தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முன் தம்பதியருக்கிடையே சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும், அவை தோற்றாலேயே தலாக் மூலம் விவாகரத்து அனுமதிக்கப்படலாம் என வலியுறுத்தியிருந்தது. ஆனால் அவ்வித நடைமுறைகள் எதனையும் கடைபிடிக்காமலேயே தலாக் மூலம் பல முஸ்லீம் கணவர்கள் விவாகரத்து செய்வதை தான் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராயிருந்தபோது தெரியவந்தது. அதற்கு காஜிகளும் உடன்போய் சான்றிதழும் வழங்குவதால் பெண்கள் அல்லலுறுகின்றனர். ஆனால் காஜிகளுக்கோ அவ்வாறு சான்றிதழ் வழங்கவே உரிமை கிடையாது’ என வாதிடுகிறார் பதர் சயீத்.
 
     தற்காலிகத் தலைமை நீதிபதி ஆர்.கே அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மனு குறித்த தங்கள்விளக்கங்களை அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கும் மாநிலத் தலைமை காஜிக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்திரவிட்டது.

0 comments:

Post a Comment