Wednesday, June 5, 2013

இஷ்ரத் ஜஹான் வழக்கு:சி.பி.ஐயின் மிருதுவான அணுகுமுறையால் 5 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜாமீன்!

                       1 Jun 2013 CBI_AFP1
 
     புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகளை அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் கைதுச் செய்யப்பட்ட 6 போலீஸ் அதிகாரிகளில் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கைதுச் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ காட்டிய மிருதுவான அணுகுமுறையே முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்க காரணமானது. இவ்வழக்கில் தொடர்புடைய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளை கைதுச் செய்வதற்கான முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறும் சி.பி.ஐ, குற்றப்பத்திரிகையை 90 நாட்கள் கழிந்த பிறகும் தாக்கல் செய்யாமல் இழுத்தடிக்கிறது.
 
     கடந்த பெப்ருவரி மாதம் முதல் 6 போலீஸ் அதிகாரிகளை, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகளை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் சி.பி.ஐ கைதுச் செய்திருந்தது. இதில் 5 பேரைக் கைதுச் செய்து 90 தினங்கள் கழிந்துவிட்டன. இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு போலீஸ் அதிகாரியான அமீனை, சி.பி.ஐ கடந்த ஏப்ரல் மாதம் கைதுச் செய்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஜி.வன்ஸாரா மற்றும் அமீன் ஆகியோர் சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகளான தருண் பரோட், ஜெ.ஜி.பர்மர் ஆகியோர் 2003-ஆம் ஆண்டு ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பதால் இவர்கள் ஜாமீனில் வெளியே வரமுடியாது.
 
     சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை 90 தினங்களுக்குள் தாக்கல் செய்யாததை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கண்டித்தது. இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகளை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலைச் செய்த வழக்கில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கும், முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவுக்கும் எதிராக ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா? என்பதை புலனாய்வு செய்து வருவதால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள பி.பி.பாண்டே என்ற முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியை கைதுச் செய்யவும், சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் கைதுச் செய்யப்பட்டு மஹராஷ்ட்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஜி.வன்ஸாராவை கஸ்டடியில் பெறவும் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டதாகவும், ஜாமீன் அனுமதிக்க கூடாது என்றும் சி.பி.ஐ வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிட்டபோதும், நீதிபதி அதனை அங்கீகரிக்கவில்லை.
 
     இதனிடையே இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள் என்ற போலியான தகவலை அளித்த ஐ.பி அதிகாரிக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. 2002-ஆம் ஆண்டிற்கும், 2004-ம் ஆண்டிற்கும் இடையே குஜராத் மோடியின் போலீஸ் நான்கு போலி என்கவுண்டர்களில் எட்டு பேரைக் கொலைச் செய்தது.
     சம்பவம் நடக்கும்போது க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக இருந்த பி.பி.பாண்டே, ஐ.பி அதிகாரி ராஜேந்திர குமாருடன் இணைந்து இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டியதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.குஜராத் மாநிலத்தில் ஸாதிக் ஜமால் என்ற மெக்கானிக்கை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த வழக்கின் பின்னணியிலும் இதே ஐ.பி அதிகாரி இருப்பதாக ஸாதிக்கின் சகோதரர் ஸபீர் ஜமால் புகார் அளித்துள்ளார்.மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வேளையில் ஸாதிக் ஜமாலை கொலைச் செய்ததாக போலீஸ் பொய் கூறியது.
 
      நான்கு போலி என்கவுண்டர்களுக்கும் தலைமை தாங்கியவர் அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக இருந்த, தற்போது சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஐ.ஜி  வன்ஸாரா ஆவார்.

0 comments:

Post a Comment