Thursday, March 14, 2013

உண்மை வெளிவருவதை தடுக்க ராம்சிங் கொலையா?

                         14 Mar 2013 ramsingh
 
     புதுடெல்லி:போலீஸ்-க்ரிமினல்கள் முறைகேடான தொடர்பே பாராமெடிக்கல் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ராம்சிங்கின் மர்மமான மரணத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு வலுவடைந்து வருகிறது. ராம்சிங்கும், அவனது கூட்டாளிகளும் போலீசுடன் நல்ல உறவை பேணி வந்துள்ளனர். இது நீதிமன்றத்தில் வெளியாகிவிடுமோ என்ற பீதியில் சிறைக்குள்ளே இருக்கும் க்ரிமினல்களை உபயோகித்து ராம்சிங் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
     கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த டிசம்பர் 16-ஆம் தேதி இரவு மாணவியுடன் டெல்லி மாநகரத்தில் பல முறை சட்டவிரோதமாக சுற்றி திரிந்த பேருந்து, போலீஸின் பி.சி.ஆர் வேன்களின் கண்ணில் படவில்லை என்பது போலீஸ்-கிரிமினல்கள் கள்ளத் தொடர்பின் உதாரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது. போலீசுக்கு லஞ்சம் வழங்கி இம்மாதிரியான குற்றங்கள் நடப்பது வழக்கமாகும்.
 
     பாரா மெடிக்கல் மாணவியை பேருந்தில் ஏற்றுவதற்கு முன்பாக இன்னொரு நபரை ஏற்றி அவரிடம் இக்கும்பல் கொள்ளையடித்தது. சம்பந்தப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்து தெரிவது என்னவெனில் போலீஸ்-க்ரிமினல்களின் கள்ள தொடர்பாகும்.
 
     தாங்கள் ஏறிய பேருந்தில் ‘யாதவ்’ என்று எழுதப்பட்டிருந்ததாக மாணவியின் நண்பர் வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே பேருந்தை கண்டுபிடித்ததாக போலீஸ் கூறியது. ஆனால், இவர்களிடமிருந்து லஞ்சம் வாங்கிய ட்ராஃபிக் போலீஸ் காரர்தாம் எதிர்ப்பு வலுவடைந்தபோது பேருந்தை கண்டுபிடித்ததாக இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
 
     போலீஸுடனான கள்ள உறவை ராம்சிங் வெளிப்படுத்திவிடுவானோ? என்ற பீதிதான் க்ரிமினல்களை உபயோகித்து சிறை அறைக்குள் அவனை கொலைப்படுத்தியதன் பின்னணி என்று கூறப்படுகிறது.
 
     அதேவேளையில், ராம்சிங்கின் தற்கொலையைத் தொடர்ந்து அவன் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் முடித்துக்கொள்ளப்பட்டது. ராம்சிங்கின் மரணத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதாகவும், நடவடிக்கைகளை முடித்துக் கொண்டதாகவும் அவனது வழக்கறிஞர் வி.கே.ஆனந்த் கூறினார்.

0 comments:

Post a Comment