Sunday, March 10, 2013

தலித் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகும் சம்பவங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை – தலைமை நீதிபதி கடும் கண்டனம்!

10 Mar 2013
 
     கொல்கத்தா:டெல்லி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை பெரியதொரு சம்பவமாக மாற்றிய ஊடகங்கள், அதற்கு சமமாக பாதிக்கப்படும் தலித் பெண்கள் விவகாரத்தில் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமஸ் கபீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
     சர்வதேச மகளிர் தினத்தில் கொல்கத்தாவில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமஸ் கபீர் கூறியது:
 
     டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை ஒற்றை நிகழ்வல்ல. டெல்லி சம்பவம் வரலாற்று சம்பவமாக மாற்றப்பட்டது. ஏராளமான வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். கூட்டு பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட பெண்ணிற்காக பத்திரிகைகளின் தலைப்புகள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் அலறின. ஆனால், அதே தினத்தில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி தீக்காயம் பட்ட 10 வயதான தலித் சிறுமியின் செய்தி பத்திரிகைகளின் உள்பக்கத்தில் வெறும் ஐந்து அல்லது பத்து வரிகளில் முடிந்துவிட்டது.
 
     டெல்லி சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்மணியின் குடும்பத்திற்கு அரசு உள்ளிட்ட ஏராளமான இழப்பீடுகள் கிடைத்தன. ஆனால், பாவப்பட்ட தலித் சிறுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் என்ன கிடைத்தது?
 
     பெண்களுடனான ஆண்களின் மனப்பான்மை மாறவேண்டும். இத்தகைய நபர்களை கழுத்தைப் பிடித்து தூக்கிலிட வேண்டும்.பாலியல் கொடுமைக்கு ஆளாகும் நபர்கள்களுக்காக டெல்லியில் விரைவு நீதிமன்றம் நிறுவவேண்டும். தலித் சிறுமியின் வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.
 
     டெல்லி கூட்டுபாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய மைனரான குற்றவாளியை இதர குற்றவாளிகளைப் போலவே விசாரணைச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அது சட்டவிரோதம் ஆகும். இவ்வாறு அல்டமஸ் கபீர் கூறினார்.

0 comments:

Post a Comment