Thursday, March 21, 2013

இலங்கைக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமா? – பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு!

                             21 Mar 2013 c
 
புதுடெல்லி:இலங்கைக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு வியாழக்கிழமை முடிவு செய்யவுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வெளியுறவுத் துறை உயரதிகாரிகளுடனும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோர் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் புதன்கிழமை இரவு ஆலோசனை நடத்தினர்.

     அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், ‘இலங்கை போர்க் குற்றங்கள்’ என்ற வார்த்தையை ‘இனப்படுகொலை’ எனவும் போர்க் குற்றங்கள் மீதான விசாரணயை ‘சர்வதேச அளவிலான அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்’ எனவும் குறிப்பிடும் வகையில் இந்தியா திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

     இந்த நிலையில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா டெல்லி வரும்படி கடந்த திங்கள்கிழமை இரவு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், திலீப் சின்ஹா டெல்லி வருவதற்கு முன்பாகவே மத்திய கூட்டணி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திமுக செவ்வாய்க்கிழமை விலக்கிக் கொண்டது. அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஐந்து திமுக அமைச்சர்களும் தங்கள் பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்தனர்.

     இந்த நிகழ்வுகளுக்கு இடையே, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய், ஐ.நா. இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா ஆகியோர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

     அப்போது, திமுகவின் கோரிக்கைப்படி ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை தீர்மானத்தில் சேர்ப்பது இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு முரணாக அமைந்து விடும் என்று திலீப் சின்ஹாவும் வெளியுறவுத் துறை அதிகாரிகளும் கூறியதாகத் தெரிகிறது. இதே வேளை, திமுகவின் கோரிக்கைப்படி பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பாஜக, சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் புதன்கிழமை மாலையில் ஆலோசனை நடத்தினார்.

     அப்போது, “பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் இதுபோன்ற தீர்மானங்களை இந்தியா கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டோம்; நமது பாராளுமன்றத்தில் அத்தகைய தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதை எங்கள் கட்சி ஆதரிக்காது” என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ரேவதி ரமண் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

     இதற்கிடையே, மக்களவையின் முதல் பகுதி கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. அதனால், எஞ்சிய இரண்டு நாள்களுக்குள் அவையில் முக்கிய அலுவல்களை நிறைவேற்ற அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரும் கூட்டத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார் புதன்கிழமை இரவு 7 மணிக்குக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், “இலங்கை விவகாரம் தொடர்பாக எங்கள் கட்சி விடுக்கும் கோரிக்கைப்படி அவையில் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும்.” என்றார். இதே போல மக்களவை அதிமுக தலைவர் தம்பிதுரை, “இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை விளக்கும் எங்கள் கட்சியின் கோரிக்கையையும் ஏற்க வேண்டும்” என்றார்.

     இதையடுத்து பேசிய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத், “இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறேன். மாநிலங்களவையில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடன் நானும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவும் ஆலோசனை நடத்தினோம். ஆனால், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.” என்றார்.
     முன்னதாக, மாநிலங்களவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக பிரச்னை எழுப்பி வரும் திமுக உறுப்பினர் திருச்சி சிவா, அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா ஆகியோருடன் மத்திய அமைச்சர்கள் சுஷீல்குமார் ஷிண்டே, கமல்நாத், இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

     “இலங்கை மீதான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க மறுக்கின்றன. அதனால், அவை நடவடிக்கை சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்” என்று தமிழக உறுப்பினர்களிடம் மத்திய அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர்.
மேற்கண்ட இரண்டு கூட்டங்களிலும் பேசிய கமல்நாத், சுஷீல்குமார் ஷிண்டே ஆகியோர், “இலங்கை தீர்மானம் தொடர்பாக ஜெனீவாவிலும் நமது நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து தொடர்ந்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த விஷயத்தில் வியாழக்கிழமை முடிவு எடுக்கப்படும்.” என்று கூறினார்

0 comments:

Post a Comment