Thursday, March 14, 2013

வெளிநாட்டு குற்றவாளிகள் தப்புவது தொடர்கிறது!

                                         13 Mar 2013 வெளிநாட்டு குற்றவாளிகள்
 
     புதுடெல்லி:இரண்டு இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படையினர் ஜாமீனில் நாட்டிற்கு சென்று திரும்பி வராததைத் தொடர்ந்து தூதரக உறவுகள் குறித்த சர்ச்சைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
 
     குற்றவாளிகளை ஒப்படைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இரு நாட்டு வெளியுறவுத்துறைகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்தியா ஒத்துழைக்கவில்லை என்று இத்தாலி குற்றம் சாட்டுகிறது. இது போன்ற போலியான வாதங்களை முன்வைத்து பல வெளிநாட்டு குற்றவாளிகளும் விசாரணையில் இருந்து தப்பி வருகின்றனர்.
 
     போபால் விஷவாயு விபத்து வழக்கில் குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் இதுவரை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. விபத்து நடந்த உடனேயே இவரை கைது செய்தபோதிலும் தனி விமானம் ஒன்றில் அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டார். அன்று மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்த அர்ஜூன் சிங் தான் தனி விமானத்தை ஏற்பாடுச் செய்தார் என்று குற்றச் சாட்டு எழுந்தது.
 
     விபத்து நடக்கும் வேளையில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சி.இ.ஓவாக பதவி வகித்த ஆண்டர்ஸனை 1992-ஆம் ஆண்டு போபாலில் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. 2009-ஆம் ஆண்டு ஆண்டர்ஸனை கைதுச் செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆதாரமில்லை என்று கூறி அமெரிக்கா ஆண்டர்ஸனை ஒப்படைக்க மறுத்து வருகிறது. ஆகையால் இவர் மீது இதுவரை விசாரணை நடைபெறவில்லை.
 
     கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரான்சு உளவு வழக்கில் பிரான்சு நாட்டு தூதரின் உத்தரவாதத்தின் பேரில் நாட்டிற்கு திரும்பிய குற்றவாளிகளான பிரான்சு நாட்டைச் சார்ந்த பிரான்சிஸ் க்ளேவல், எல்லி ஃபிலிப் ஆகியோர் இதுவரை நாடு திரும்பவில்லை. பிரான்சு மற்றும் இந்திய அரசின் உறுதியின் பேரிலேயே 1996-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குற்றவாளிகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இவர்களை கைது செய்ய மத்திய அரசு இண்டர்போலின் உதவியை நாடியது.சி.பி.ஐ இணை இயக்குநரின் தலைமையில் குழு ஒன்று குற்றவாளிகளை தேடி பிரான்சுக்கு சென்றபோதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. சி.பி.ஐ விசாரணை நடத்திய இவ்வழக்கு தற்போதும் கேரள மாநிலம் எர்ணாகுள மாவட்ட முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 
     1995-ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் புரூலியாவில் ஆயுதங்களை கொட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியான டென்மார்க் நாட்டின் குடிமகன் கிம் டேவியை இதுவரை இந்தியாவால் பிடிக்க முடியவில்லை. இவரை ஒப்படைக்க கோரும் இந்தியாவின் கோரிக்கையை இதுவரை டென்மார்க் அரசு பரிசீலிக்கவில்லை. போஃபோர்ஸ் வழக்கில் குற்றவாளியான இத்தாலியின் வர்த்தகர் குவாத்ரோச்சை இதுவரை கைது செய்ய முடியவில்லை.

0 comments:

Post a Comment