Saturday, March 23, 2013

இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் மக்கள் உரிமை இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

     இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் மக்கள் உரிமை இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி.
 
கேள்வி: இலங்கைத் தமிழர் விவகாரம் தற்போது தமிழகத்தில் மக்கள் போராட்டமாக மாறிவிட்டதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
js_ribai
     பதில்: இலங்கைத் தமிழர் விவகாரம் ராஜீவ் படுகொலைக்கு முன்பு, பின்பு என இரு வகையாகப் பார்க்கப்பட்டது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழக மக்கள் விடுதலைப்புலிகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மவுனம் காத்தார்கள். ஆனால் 2009ஆம் ஆண்டில் நான்காம் கட்டப் போர் என சொல்லப்படும் கடைசிகட்டப் போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள், கற்பழிப்புக்கு உள்ளானார்கள். குழந்தைகள் கூட குதறப் பட்டனர். எண்ணற்ற இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பதற, பதற கொலை செய்யப் பட்டனர்.
 
     இதுதான் தமிழகத்தில் நிலைமை மாற காரணமாகியது. அதுவும் சேனல்-4 என்ற லண்டன் தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படங்களில் வெளியான காட்சிகள் உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. குறிப்பாக, தமிழக மக்களைப் பதறச் செய்துவிட்டது.
 
     இலங்கைத் தமிழர் விவகாரம் இப்போது முள்ளிவாய்க்காலுக்கு முன்பு, பின்பு என தமிழக மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. அதுவும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கரங்களிலிருந்து முன்னேறி மக்கள் கைகளுக்குப் போய்விட்டது. அதன் ஒரு வெளிப்பாடுதான் மாணவர்களின் போராட்டங்கள்.
 
கேள்வி: இவ்விஷயத்தில் இந்திய (நடுவண்) அரசின் நிலைப்பாடு புதிராக உள்ளதே... இது அண்டை நாட்டு விவகாரம் என்கிறார்களே...?
 
     பதில்: முதலில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை ராஜீவ் படுகொலையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும். மத்தியில் அவர்கள்தான் ஆள்கிறார்கள். நான் குறிப்பிட்டதுபோல், முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்பு உருவாகியுள்ள புதிய சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
     அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்ட காட்சிகள் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இது அண்டை நாட்டு பிரச்சனை எனக்கூறி ஒதுங்க முடியாது. முன்பு கிழக்கு பாகிஸ்தானில் (இன்று பங்களாதேஷ்) உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டபோது, அகதி களாக வங்காளிகள் இந்தியாவுக்கு வந்தார்கள். இவ்விவகாரத்தை இனி இந்தியா மவுனமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அந்நாட்டு விவகாரத்தில் துணிந்து தலை யிட்டார்.
 
‘முக்தி வாகினி’ என்ற புரட்சிப் படைக்கு இந்தியா ஆயுத உதவி செய்து, ‘பங்களாதேஷ்’ என்ற நாடு உருவாக இந்தியா உதவியது.
 
‘திபெத்’ மக்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தபோது, ‘தலாய்லாமா’வுக்கு நேரு அடைக் கலம் கொடுத்தார்.
 
ஏன்? விடுதலைப்புலிகள், டெலோ, பிளாட் போன்ற தமிழ் ஆயுத அமைப்புகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்கவில்லையா? ராஜீவ் காந்தி இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வீச சொல்ல வில்லையா? இப்போது மாலத்தீவின் அரசியல் குழப்பத்தில் தடையிடவில்லையா?
 
     இந்த வரலாறுகளையெல்லாம் மறந்துவிட்டு, இந்தியா இப்போது இரட்டை வேடம் போடுகிறது. வரலாற்று உண்மைகளை மறந்து விட்டுப் பேசக்கூடாது.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அம் மக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது.
 
கேள்வி: இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவாக செயல்படாவிட்டால், இலங்கை சீனாவின் உதவியை நாடும் என்றும், இதனால் தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இந்தியா கூறுகிறதே...
 
     பதில்: இந்தியாவைக் காட்டி சீனாவிடமும், சீனாவைக் காட்டி இந்தியாவிடமும் உதவிகளைப் பெறுகிறது இலங்கை. மறுபுறம் இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தானிடமும் உதவி பெறுகிறது. அதாவது எதிரும், புதிருமான அரசியல் எதிரிகளை எல்லாம் இலங்கை தனக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதிலும், ராஜதந்திர ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது.
 
     தனது துறைமுகங்களை சீனாவின் கடற்படை பயன்பாட்டிற்கு இலங்கை அனுமதிக்கிறது. இது ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்திற்கு எதிரானது.
 
     சீனா பெரும் முதலீடுகளை இலங்கையில் கொட்டியிருக்கிறது. இந்தியா பங்களா தேஷையும், மாலத்தீவையும் கட்டுப்படுத்துவது போல சீனா, இலங்கையைக் கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வந்துவிட்டது.
 
     தற்போது இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை, தடுமாற்றத்தில் உள்ளது. இந்தியா உதவினாலும், உதவாவிட்டாலும் இலங்கை சீனாவுக்குத்தான் விசுவாசமாக இருக்கும். இதை இந்திய - சீனப் போரிலும் பார்த்தோம். எனவே இந்தியா இதைக் கூறியே தமிழர்களை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
 
கேள்வி: அமெரிக்க எதிர்ப்பு மனநிலை உடைய நீங்கள், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை எப்படி ஏற்கிறீர்கள்?
 
     பதில்: நாங்கள் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்கும், அதன் பன்னாட்டு பயங்கர வாதத்திற்கும் எதிரானவர்கள். அதேநேரம், நீதியின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பவர்கள்.
 
     இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பேச அமெரிக்காவுக்கு அருகதை கிடையாது. ஜப்பானில் அணுகுண்டு வீசியதில் தொடங்கி, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்க பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட நாடுகளும், மக்களும் அதிகம்.
 
     இதே இலங்கை ராணுவத்துக்கு தமிழர்களைப் படுகொலை செய்ய, 1984ல் இலங்கையின் வனப்பகுதிகளில் ‘கிரின் பரேட்’ என்ற தனது ராணுவ அதிரடிப்படை மூலம் இலங்கை ராணுவத்துக்கு இதே அமெரிக்காதான் பயிற்சி கொடுத்தது.
 
     இப்போது அமெரிக்கா, நாடகம் ஆடுகிறது. அதன் நோக்கம் இலங்கையைப் பயன்படுத்தி, சீனா அப்பகுதியில் மேலாதிக்ககம் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. இலங்கையை மிரட்டவே அமெரிக்கா நாடகமாடுகிறது.
 
     அவர்கள் கொண்டுவரும் தீர்மானம், ‘இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசே ஒரு விசாரணையை நடத்தவேண்டும்’ என்கிறது. ராஜபக்சே தன்னைத்தானே குற்றவாளி என முடிவெடுக்க அனுமதிப்பாரா? இது வேடிக்கையாக இல்லையா?
 
     நாங்கள் சொல்வது என்னவெனில், இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை அறிவித்து, ஒரு சுதந்திரமான - சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.
 
     இலங்கை எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
 
கேள்வி: இந்த விவகாரத்தில் நீங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?
 
     பதில்: நாங்கள் மனித உரிமைகளுக்காகப் பாடுபடுபவர்கள். உலகில் எங்கு மனித உரிமை மீறல்களும், இனப்படுகொலைகளும் நடந்தாலும் அதைக் கண்டிப்பவர்கள். பாலஸ் தீனம், ஈராக், சோமாலியா, குஜராத், காஷ்மீர், மணிப்பூர், இலங்கை என எங்கு அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.
 
     இலங்கை நமக்கு அருகில் உள்ள நாடு என்பதாலும், அங்குள்ள தமிழர்கள் நமக்கு நெருக்கமான தொடர்புடையவர்கள் என்ப தாலும் இவ்விஷயத்தில் மனிதாபிமானத்தோடு அக்கறைக் காட்டுவது அவசியமாகிறது.
 
கேள்வி: இலங்கையில் விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைக் கொன்றவர்கள். அதை மறந்துவிட்டீர்களா?
 
     பதில்: நாங்கள் மறக்கவில்லை. புலிகளின் பல தவறுகளில் அதுவும் ஒன்று. அதேசமயம், அச்சம்பவம் குறித்து 2002ல் நடைபெற்ற சர்வதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபாகரன், பகிரங்க மன்னிப்பு கோரினார். அதன்பிறகு பிரபாகரனுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் குழு கிளிநொச்சியில் புரிந்துணர்வு சந்திப்பை நடத்தினார்கள்.
 
    அதேசமயம், நாங்கள் தெளிவாக இருக் கிறோம். நாங்கள் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவதில்லை. அவர்கள் இப்போது களத்தில் இல்லை.
 
    நாங்கள் இலங்கையில் போரினாலும், சிங்கள பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்களுக்காக மனிதாபிமானத்தோடு வாதாடுகிறோம். நாங்கள் முள்ளிவாய்க்கால் போருக்குப் பிந்தைய புதிய சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுகிறோம்.
 
கேள்வி: விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைப் படுகொலை செய்ததையும், ராஜபக்சே தமிழ் மக்களைக் கொன்று குவித்ததையும் சமப்படுத்தி இலங்கையிலும், தமிழகத்திலும் சிலர் பேசுகிறார்களே...
 
     பதில்: அவர்களுக்காக நாம் பரிதாப் படுகிறோம். இப்போது இலங்கை அரசும் இதேபோல் கருத்துக்களைப் பேசி தங்களின் தவறுகளை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். கொத்துக் கொத்தாய் சொந்த பந்தங்களை இழந்தவர்கள், மயானத்தில் நின்றுகொண்டு ஓலமிடும்போது, ‘பார்த்தாயா... எங்களை அவர்கள் கொன்றது நினைவில்லையா? இப்போது தெரிகிறதா? எங்களைக் கொன்றது என்ன நியாயம்?’ என்றெல்லாம் பேசுவது மனிதாபிமானமற்றது. புலிகள் செய்த தவறுகளுக்கு அப்பாவித் தமிழ் மக்களைப் பொறுப்பாக்கக் கூடாது.
 
     “...எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம்; (எவ்வளவு விரோமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள்...” என்ற திருமறை வசனம் (திருக்குர்ஆன் 5:8) நம்மைக் கடுமையாக எச்சரிக்கிறது.
 
     அதுமட்டுமின்றி, தமிழகத்தில் சிலர் இதுபோன்ற மனநிலையில் பொறுப்பற்ற முறையில் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.
 
    அரசியல் தெளிவு, சமூகப் பொறுப்பு, நல்லிணக்கம் குறித்து புரிதல் இல்லாதவர்கள் இப்படி செய்கிறார்கள். புலிகளின் விவகாரத் தையும், அப்பாவி தமிழ் மக்களின் வாழ் வுரிமையையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.
 
     பெரும்பான்மையான தமிழக முஸ்லிம்கள் எங்களது கருத்தோட்டத்தில் தெளிவாக இருக்கிறார்கள். முஸ்லிம்களை முதன்மைப் படுத்தி அரசியல் நடத்தும், எமது அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அரசியல் களத்தில் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்து வருகிறது. சிறுவன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முதலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது மனித நேய மக்கள் கட்சி தான். அதன்பிறகுதான் மற்ற கட்சிகள் களத்துக்கு வந்தன. இன்று மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடு வதற்கு உத்வேகத்தைத் தந்தது மமக நடத்திய முதல் போராட்டம் தான் என்பதை மறந்து விடக் கூடாது.
 
கேள்வி: இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?
 
     பதில்: இங்கு தமிழகத்தில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும், இம்மண்ணில் பூர்வகுடிகளாக வாழும் அனைவரும் நம்மைத் தமிழர்கள் என்கிறோம். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழி இணைக்கிறது.
இலங்கையில் சூழல் வேறு. அங்கு இந்துக்கள், சைவ மதத்தினர் உள்ளிட்டவர்கள் தங்களைத் தமிழர்கள் என்கிறார்கள். இந்திய வம்சாவழியினர் தங்களை ‘மலையகத் தமிழர் கள்’ என்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களை ‘தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ என்கிறார்கள். அதாவது, தங்களை மற்றொரு தனித்த தேசிய இனமாகக் கருதுகிறார்கள்.
 
     இப்போது இலங்கையில் கோயில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் என சிறுபான்மையினருக்குச் சொந்தமான 65 வழிபாட்டுத் தலங்களை சிங்கள வெறியர்கள் சேதப்படுத்தி இருக்கிறார்கள். பௌத்த குருமார்கள் மத வெறிப் பிடித்து அலைகிறார்கள். அங்கு ‘பொது பல சேனா’ என்ற புத்த மதவெறி அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை களைத் தூண்டி வருகிறது. இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அவர்கள் குறிவைக்கிறார்கள்.
முஸ்லிம்கள் முறைப்படி உண்ணும் ‘ஹலால்’ முத்திரையிடப்பட்ட உணவு கலாச் சாரத்திற்கு தடை விதித்திருக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபுக்கு (முகத்திரை) தடைவிதிக்க முனைகிறார்கள்.
 
     முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை முஸ்லிம்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இலங்கை முஸ்லிம்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி செயல்படுகிறது.
 
கேள்வி: இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து?
 
     பதில்: இது ஐ.நா. சபை முடிவெடுக்க வேண்டிய ஒரு சர்வதேச விவகாரமாகும். அங்கு ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலை யகத் தமிழர்கள் என்று மூன்று பெரும் இனங் களின் உரிமைகள் அடங்கியிருக்கிறது. இதை கவனமுடனும், மனிதாபிமானத்தோடும் அனைவரும் அணுக வேண்டும். இவ்விவகாரம் என்பது ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து, தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டித்த பிறகு பேசவேண்டிய அடுத்தக்கட்ட நகர்வாகும்.
 
கேள்வி: இலங்கையில் உள்ள தமிழர் தலைவர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன?
 
     பதில்: முன்பு வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அப்பகுதிகளில் மீள் குடியேற்றம் கண்டு வருகிறார்கள். அவர்களை அரவணைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்கள் மீண்டும் கிடைக்க துணை நிற்க வேண்டும். தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இரத்த பந்தங்கள் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். இதில் இரண்டு சமூகங்களின் தலைமையும் இணைந்து செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாக இணைவது குறித்து வரும் காலங்களில் இருதரப்பும் விவாதத்தை தொடங்க வேண்டும்.
 
கேள்வி: இதுகுறித்து நீங்கள் முயற்சிகள் ஏதும் எடுப்பீர்களா?
 
     பதில்: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் குறித்து யாரும் பேசுவதில்லை. அவர்களில் பலர் இன்னமும் அகதிகளாக உள்ளனர். நாங்கள் பல மேடைகளில் அதைப் பேசி வருகிறோம். இலங்கை முஸ்லிம்களின் தலைமையும், தமிழர் தலைமையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் தலைமையும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோளாகும். இதை நாங்கள் முன்னெடுக்கத் தயாராக இருக்கிறோம். சகோதரர்கள் நமக்குள் உறவு வலுப்பட வேண்டும் என விரும்புகிறோம். விரைவில் அதற்கான காலம் கனியும் என நம்புகிறோம்.thanks, keetru

0 comments:

Post a Comment