Thursday, March 21, 2013

இதயம் கவர்ந்து முர்ஸி நாடு திரும்பினார்!

                    21 Mar 2013 morsi_india_afp_1_670
 
     புதுடெல்லி:ஜமால் அப்துல் நாஸரின் நினைவுகளை மறக்காத இந்திய தலைவர்களின் உள்ளங்களை 3 தின சுற்றுப்பயணத்தின் போது கவர்ந்த எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி நாடு திரும்பினார். ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு தீர்வு காண எகிப்து மத்தியஸ்தம் வகிப்பதற்கு அங்கீகாரம் அளித்த இந்தியா, எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் என்ற அடைமொழியிட்டு பாராட்டி முர்ஸியை வழியனுப்பி வைத்தது.
 
     இந்திய அரசியல் தலைவர்களை மட்டுமல்ல, வர்த்தக சமூகத்தையும் ஈர்த்தார் முர்ஸி. புதன்கிழமை ஓபராய் ஹோட்டலில் ஃபெடரேசன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமேர்ஸ் ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சி இதற்கு சான்று பகர்ந்தது. ஜவஹர்லால் நேருவும், ஜமால் அப்துல் நாஸரும் அரசியல் தலைவர்களாக இருந்த காலத்தில் நிலவிய இந்தியா-எகிப்து இடையேயான உறவை குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, ஜனநாயக எகிப்தின் முதல் அதிபர் என்ற நிலையில் முஹம்மது முர்ஸி வரலாற்றுப் புருஷனாக மாறிவிட்டார் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முஹம்மது முர்ஸி, ‘மேற்காசியாவின் முதல் சக்தியாக எகிப்தை அங்கீகரித்த மனநிறைவுடன் நாடு திரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
 
     பிரதமர் மன்மோகன்சிங்குடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஃபலஸ்தீன், சிரியா பிரச்சனைகளைக் குறித்து விளக்கிய முர்ஸி, எகிப்து இவ்விவகாரத்தில் மேற்கொண்ட நிலைப்பாட்டையும் தெரிவித்தார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவைக் குறித்து நன்றாக அறிந்த முர்ஸி அரசியல் நிலைப்பாட்டில் இந்தியாவை எகிப்துக்கு ஆதரவாக மாற்றுவதில்வெற்றிக் கண்டார். சுதந்திர நாட்டை உருவாக்குவதற்கான ஃபலஸ்தீன் மக்களின் சட்டரீதியான உரிமையை ஆணித்தரமாக தெரிவித்த முர்ஸி, பிரதமர் மன்மோகன்சிங்கின் வாயால் இந்த நிலைப்பாட்டை கூறவும் வைத்தார்.

     தொழில்நுட்ப அறிவை பெறவும், வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும் எகிப்திற்கு இந்தியாவின் நேரடி முதலீடு அத்தியாவசிய தேவை என்று முர்ஸி தெரிவித்தார். முதலீடுகள் தொடர்பான தர்க்கங்களை பரிசீலிக்க தனிக்குழுக்கள் அமைக்கப்படும். மாறிய எகிப்தின் வாய்ப்புகளை பயன்படுத்த இந்திய தொழிலதிபர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் முர்ஸி அழைப்பு விடுத்தார். தெற்காசியாவுடனான ஒத்துழைப்பில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முர்ஸி தெரிவித்தார்.
 
     புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் பிரச்சனைகளை பூதகரமாக காட்டும் ஊடக செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று ஸன்ஸார், கிர்லோஸ்கர், யூ ஃப்ளக்ஸ் உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவன தலைவர்கள் கூறினர். புரட்சிக்குப் பிறகு தாங்கள் நடத்தும் முயற்சிகள் குறித்து விவரித்த இவர்கள், தற்போது எகிப்து குறித்து வெளியாகும் செய்திகளின் பின்னணியில் பி.பி.சி இருப்பதாக குற்றம் சாட்டினர். இந்தியாவில் இவ்வளவு அம்பாசிடர்களை பெற்ற முர்ஸி அதிர்ஷடசாலி என்று ஃபெடரேசன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமேர்ஸ் தலைவர் நைனா லால்கித்வாய் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment