Wednesday, March 20, 2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா நீர்த்துப் போகச் செய்துவிட்டது – ஆம்னஸ்டி குற்றச்சாட்டு!

                              20 Mar 2013 amnesty international
 
     புதுடெல்லி:ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா நீர்த்துப் போக செய்துவிட்டது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் குற்றம்சாட்டியுள்ளது.

     ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தை முன்னிட்டு இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். அவரது ஆண்டு அறிக்கையில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணைக்குப் பரிந்துரைத்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜெனிவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன் வைத்தது. இந்தத் தீர்மானத்தில் நவநீதம் பிள்ளையின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை அமெரிக்காவும் வலியுறுத்தியிருந்தது. இந்த ஒரிஜினல் தீர்மானத்தின் மீது பல்வேறு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையாகவும் மென்மையாகவும் கருத்துகளை சேர்க்கவலியுறுத்தியிருந்தன. அப்படி இப்படி எனத் திருத்தப்பட்ட இறுதி அறிக்கை மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

     சர்வதேச விசாரணை கைவிடப்பட்டது தற்போது இறுதியாக வாக்கெடுப்புக்காக முன் வைத்திருக்கும் தீர்மானத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தக் கோருவது என்பது நீக்கப்பட்டுவிட்டது. இதற்கு இந்தியாவின் அழுத்தமே காரணம் என்கிறார் ஆம்னஸ்டி அமைப்பின் இந்திய பிரதிநிதி ஆனந்த பத்மநாபன். அத்துடன் இலங்கை அரசு வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தப் போவதாக அறிவித்திருப்பதை வரவேற்றும் இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வடக்கில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் புதியதாக சில வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக ஒரு கடுமையான நிலைப்பாட்டை தொடக்கத்தில் மேற்கொண்டிருந்தது. ஆனால் தற்போது தீர்மானம் முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்திருப்பது என்பது இந்தியா-இலங்கை இடையேயான உறவுக்கான வெற்றி. இலங்கைக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டவர்களுக்கு தோல்வி என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
 
     ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையோ மிகக் கடுமையான ஒரு நிலைப்பாட்டை இலங்கைக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் நிலையில் ‘இந்தியாவின் செல்வாக்குதான்’ இலங்கையைக் காப்பாற்றியிருக்கிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இனி மத்திய அரசால் முடியுமா?

     ஆனால் தற்போது மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலை உருவாகி இருப்பதால் தீர்மானத்தை இன்னும் வலுவானதாக்க முயற்சிகளை மேற்கொள்ளக் கூடும் என்றும் ஒருசில தகவல்கள் உலா வருகின்றன. அமெரிக்காவின் இறுதித் தீர்மானம் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்தியா கருதுவது போல அவ்வளவு எளிதாக தீர்மானத்தை வலுவானதாக்கிவிட முடியாது என்கின்றனர். அப்படியே இந்தியா தீர்மானத்தை சற்று வலுதானதாக மாற்ற விரும்பினாலும் விவாதத்தின் போது வாய்மொழியாகத்தான் கருத்து தெரிவிக்க இயலும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

அமெரிக்காவின் நிலை

     இதேபோல் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்காவோ, தீர்மானம் மென்மையோ கடுமையோ… தாம் கொண்டு வரும் ஒரு தீர்மானத்தை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டன என்ற ஒரு தோற்றத்தையே விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக, இலங்கைக்கு மிக ஆதரவாக இருக்கக் கூடிய கியூபா தெரிவித்த பல திருத்தங்களை அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருக்கிறது .. அதாவது இந்தியாவைப் போல தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதில் முனைப்பு காட்டிய நாடு கியூபா. அதன் திருத்தங்களைக் கூட அமெரிக்கா ஏற்றுக் கொண்டது என்ற நிகழ்வையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

     அமெரிக்காவைப் பொறுத்தவரை தமக்கு எத்தனை நாடுகள் தம்மை ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அத்தனை ‘நீர்த்துப் போகச் செய்தல்’ நடவடிக்கைகளுக்கும் உடன்படவே செய்யும் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். அதனால் மத்திய அரசு, தீர்மானத்தை வலுவானதாக்க முயற்சிக்கிறோம் என்று கூறிக் கொண்டு பிரச்சனையின் தீவிரத் தன்மையை மென்மையாக்கலாமே தவிர இலங்கைக்கு எதிரான ஒரு கடுமையான நிலைப்பாட்டுடன் கூடிய திருத்தத்துக்கு வாய்ப்பில்லை என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என்று நாளையே நமது பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட அது ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது என்றும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment