Wednesday, March 13, 2013

கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பா.ஜ.கவுக்கு பலத்த அடி!

                                    12 Mar 2013 bjp
 
     பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் பா.ஜ.கவுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது.4976 வார்டுகளில் நடந்த தேர்தலில் பாதி இடங்களின் முடிவுகள் வெளிவந்துள்ளன.இதில் எதிர்கட்சியான காங்கிரஸ், 1906 இடங்களில் வெற்றியை ஈட்டியுள்ளது. ஆனால், பா.ஜ.க மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 906 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
 
     இம்மாதம் 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோடியாக நடக்கும் அரையிறுதிப் போட்டியாக உள்ளாட்சி தேர்தல் கருதப்படுகிறது.
 
    பா.ஜ.கவை விட்டு விலகி கர்நாடகா ஜனதா பார்டியை(கே.ஜே.பி) உருவாக்கிய முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா 274 வார்டுகளை கைப்பற்றி பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரான பி.ஸ்ரீராமுலுவின் பி.எஸ்.ஆர் காங்கிரஸிற்கு 47 இடங்கள் கிடைத்துள்ளன.அதேவேளையில் எடியூரப்பா நினைத்ததை சாதிக்க முடியவில்லை.அவரது சொந்த ஊரான ஷிமோகாவில் 176 வார்டுகளில் அவரது கட்சி 34 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது.இங்கு காங்கிரஸிற்கு 64 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.பா.ஜ.கவுக்கு வெறும் 24 இடங்கள் கிடைத்தன.
 
     மைசூர் மற்றும் குல்பர்கா மாநகராட்சியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது.மைசூரில் முடிவுகள் வெளியானதில் பா.ஜ.கவுக்கு 11 இடங்களே கிடைத்துள்ளன. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 15 இடங்கள் வீதம் கிடைத்துள்ளன. பா.ஜ.கவின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக கருதப்பட்ட பெல்லாரியில் 35 இல் 21 இடங்களை கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்.
 
     கர்நாடகாவில் பெங்களூரை தவிர 7 மாநகராட்சிகள், 43 சிட்டி நகராட்சிகள், 65 டவுன் நகராட்சி கவுன்சில், 93 டவுன் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றிற்கு தேர்தல் நடைபெற்றது. கர்நாடகாவில் மிகச்சிறந்த வெற்றியை ஈட்டியுள்ளதாக கூறிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஷித் ஆல்வி, இது பா.ஜ.கவின் அழிவின் துவக்கம் என்று குறிப்பிட்டார்.
 
    அதேவேளையில் சட்டப்பேரவை தேர்தலில் கட்சி மீண்டு வரும் என்று பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் ஷானவாஸ் ஹுஸைன் கூறினார்.

0 comments:

Post a Comment