Friday, March 22, 2013

மும்பைக் குண்டுவெடிப்பு வழக்கு: 10 பேருக்கு தண்டனை குறைப்பு! சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை!

                             22 Mar 2013 map-of-mumbai-blast
 
     புதுடெல்லி:மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு (53) விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், சிறைத் தண்டனையை 6லிருந்து 5 ஆண்டாகக் குறைத்து வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 10 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

     ஜாமீனில் உள்ள சஞ்சய் தத், ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டதால் மீதம் உள்ள மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டியிருக்கும். “குற்றத்தின் தன்மை கடுமையானது என்ற காரணத்தால், நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. 4 வாரங்களுக்குள் தத் சரண் அடைய வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

     கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயமடைந்தனர்.இக்குண்டுவெடிப்பு அதற்கு முன்பு மும்பையில் சிவசேனா ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கலவரத்தின் தொடர்ச்சியாகும். கலவரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    மும்பைக் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், கடந்த 2006ஆம் ஆண்டு 100 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில், 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. சட்ட விரோத ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கிலிருந்து 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

      இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய நிழல் உலக தாதா என கருதப்படும் தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டவர்களுக்கு உதவியதாகவும், சட்டவிரோதமாக ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அரசுத் தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் பி.எஸ். சவுகான் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

     மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்பு உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றும் தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. பயிற்சி வழங்கி உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

     இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் யாகூப் அப்துல் ரஸ்ஸாக் மேமன் என்பருக்கு மட்டும் மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. 10 பேரின் தண்டனையை சாகும் வரை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. மேலும் ஒருவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள டைகர் மேமனின் சகோதரர் தாம் அப்துல்ரஸ்ஸாக் மேமன்.
     “குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஸாக் மேமன் முக்கியப் பங்கு வகித்துள்ளார். எனவே, அவரது தண்டனையைக் குறைக்க முடியாது.” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
     தடா நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில், அஷ்ரஃபுர் ரஹ்மான் அஸிமுல்லா என்பவரது தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. மீதம் உள்ளவர்களின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இந்த வழக்கிலிருந்து 4 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான மும்பை கலவரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொலைச் செய்த சிவசேனா ஹிந்துத்துவாதீவிரவாதிகளுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை.அவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment