Wednesday, March 14, 2012

அல் ஜெஸீரா நடுநிலை தவறுகிறதா? அதிர்ச்சித் தகவல் !

மத்தியகிழக்கு நாடுகளின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் "அல்ஜெஸீரா" செய்திச் சேவை ஒருதலைப்பட்சமாகச் செயற்படுகின்றது" எனக் குற்றஞ்சாட்டி, மத்திய கிழக்கின் மற்றொரு முன்னணிச் செய்தி நிறுவனமாகிய "ப்ரஸ்" தொலைக்காட்சிச் சேவை 
திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. "அண்மைக் காலமாய் டூனீஸியா, எகிப்து, லிபியா முதலான மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்ற அரசியல் கொந்தளிப்பு நிலைமைகள், அந்நாடுகளில் வெடித்த மக்கள் புரட்சிகள் குறித்து மிகச் சிறப்பான செய்திச் சேவையை வழங்கி உலகெங்கிலும் மிகப் பிரமாதமான வரவேற்பைப் பெற்றுக் கொண்ட அல் ஜெஸீரா செய்திச் சேவையின் போக்கில் சமீப காலமாய் ஏற்பட்டுவரும் ஒருதலைப்பட்சமான போக்கினால் மனமுடைந்துபோன பல செய்தியாளர்கள் தமது பணியை ராஜினாமா செய்துவருகின்றனர்" என ஈரானிய செய்தி நிறுவனமான "ப்ரஸ்" செய்திச் சேவை குறிப்பிடுகின்றது. "கத்தாரை மையமாகக் கொண்டு இயங்கும் அல் ஜெஸீரா, பஹ்ரைன் மற்றும் சிரியாவில் இடம்பெற்று வரும் மக்கள் புரட்சிகளின் உண்மையான கள நிலைவரங்கள் குறித்து நடுநிலையாகச் செய்தி வெளியிட முன்வரவில்லை" என்றும், "சிரியாவில் அரசுக்கு எதிரான தரப்பினரைத் தூண்டிவிடும் வகையிலும் அது செயற்பட்டுவருகிறது" என்றும் மேற்படி செய்தியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கத்தார் நாட்டின் அரசியல் லாபங்களைக் கருத்திற்கொண்டு, லிபியா, சிரியா ஆகிய நாடுகளின் தற்போதைய கள நிலைவரம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான பல்வேறு கட்டுக்கதைகளை அல் ஜெஸீரா பரப்பி வருவதாகவும், www.asiananban.blogspot.comகத்தார் நாட்டு அதிபர் கலீஃபா அல்தானியின் நேரடித் தலையீட்டின் விளைவாக அதன் செய்தி ஆசிரியர்கள் தமது பணியில் பல்வேறு நிர்ப்பந்தங்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டு வருவதாகவும் மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சிரிய அரசாங்கத்துக்கு எதிராகவும் பஹ்ரைன் அரசின் சார்பாகவும் செயற்பட்டு, உண்மைக்குப் புறம்பாக நடுநிலை தவறிச் செயற்பட்டுவரும் தமது செய்திச் சேவை நிறுவனத்தின்மீது நம்பிக்கை இழந்த செய்தியாளர்கள் பலர் அடுத்தடுத்து தமது பணியில் இருந்து விலகிச் செல்கின்றனர்" என ஈரானை மையமாகக் கொண்டு இயங்கும் "ப்ரஸ்" செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது. கத்தாரில் இருந்து செயற்பட்டு வரும் அரபு மற்றும் ஆங்கிலச் செய்திச் சேவையான அல் ஜெஸீரா, காலத்துக்குக் காலம் இத்தகைய குற்றச்சட்டுக்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அதன் பணிப்பாளர் வதா கன்ஃபரின் பதவி விலகலின்போது கூட ஒருசில கிசுகிசுக்கள் எழுந்தமை நம் வாசகர்களுக்கு நினைவிருக்கும். அல் ஜெஸீரா செய்திச் சேவை ஆரம்பத்தில் அரபியில் தொடங்கப்பட்டு, பின்னர் ஆங்கிலத்திலும் ஆரம்பிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த ஒஸாமா பின் லேடனின் பேட்டியை நேரடியாக ஒளிப்பதிவுசெய்து முதன் முதலாக வெளியிட்ட போது, உலகின் பரபரப்பான கவன ஈர்ப்பை அது பெற்றுக்கொண்டது. அதுமட்டுமல்ல, அதன் பின் "அல் ஜெஸீரா" தாலிபான்களோடு இணைத்துப் பேசப்பட்டதோடு, பயங்கரவாதிகளோடு தொடர்புடைய சேவை என மேற்குலக ஊடகங்களின் விமர்சனங்களையும் அது எதிர்கொள்ள நேர்ந்தது. சீ.என். என்., பி.பி.ஸி., ஏ.எஃப். பி. முதலான மேற்கு ஊடகங்கள் நுழையாத பல பிரதேசங்களுக்குள் ஊடுருவி, மாற்றூடகம் ஒன்றுக்கான இடத்தை இட்டு நிரப்பியதில் மிகக் குறுகிய காலத்தில் மேற்குலகினரையும் அல்ஜெஸீரா தன்பால் ஈர்த்துக்கொண்டது. குறிப்பாக, காஸா மீதான ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் அத்துமீறிய தாக்குதல்கள், காஸாவின் விடுதலைப் போராளிகளுடனான நேரடிச் சந்திப்பு, மஹ்மூத் அப்பாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இருந்த திரைமறைவு ஒப்பந்தங்கள், இஸ்ரேல் மீது லெபனானிய ஹிஸ்புல்லாக்களின் அதிரடித் தாக்குதல், எகிப்தியப் புரட்சி என்பன குறித்த செய்தி ஒளிபரப்பு அல் ஜெஸீராவின் சாதனைகளாகக் கருதப்பட்டன. இந்நிலையில், தன்னுடைய ஊடகப் பயணத்தில் எத்தனையோ செய்தியாளர்கள் மற்றும் தொழினுட்பவியலாளர்களைப் பலிகொடுத்தும், பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்டும் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் அல்ஜெஸீராவின் செய்திச்சேவை குறித்துத் தற்போது எழுந்துள்ள இக்குற்றச்சாட்டு தொடர்பில் பரவலான வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
thanks to asiananban blogger

1 comment:

  1. Original news http://www.inneram.com/news/central-east-news/al-jazeera-channel-is-accused-for-biased-coverage-3756.html

    ReplyDelete