Saturday, July 2, 2011

ஹிஜாப்

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதரசகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும்,சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
ஹிஜாபிற்கு இந்தியா முதல், பல நாடுகளில் எதிர்ப்பும், விவாதங்களும் நடந்து கொண்டு இருக்கிறது. மார்க்கம் நமக்கு ஹிஜாபை எப்படி பேணச்சொல்கிறது என்பதை இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.
ஹிஜாப் என்ற வார்த்தை திரை, பிரித்தல், பாதுகாப்பு என்ற கருத்துக்களை உள்ளடக்கியதாகும். ஹிஜாப் ஆடையோடு நின்று விடுவதில்லை, நடை, உடை, பேச்சுக்கள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் சேர்ந்ததுதான் ஹிஜாப்.
ஹிஜாப் ஊருக்கு ஒன்று, வெளியூருக்கு ஒன்று, வெளிநாட்டுக்கு ஒன்று என்ற வகையில் நமது சமுதாயத்து பெண்கள் கடைபிடித்து வருகிறார்கள். (இங்கு விதிவிலக்கைப்பற்றி மட்டும்தான் கூறுகிறேன் அனைவரையும் கூறவில்லை).
சொந்த ஊரில் ஒழுங்காக ஹிஜாபை கடைபிடிக்கும் பெண்கள் வெளி ஊர்களிலும், வெளிநாடுகளிலும் வித்தியாசமாக கடைபிடிக்கிறார்கள். தலையில் உள்ள துணி தலையில் இருப்பதில்லை கழுத்தில் மாலைபோல் வந்து விடும். தலை முடியை மறைத்து ஹிஜாபை சரியாக போடுவது சிலருக்கு மிக பாரமாக இருப்பதை காண முடிகிறது.
தற்சமயம் புர்க்காவிற்கான தலைதுணிகள் மெல்லிய துணிகளாக வருகிறது. தலைமுடியும், தலையில் உள்ள பூக்களும் வெளியில் தெரியாவண்ணம் தலைதுணி இருப்பதே மிகச் சிறந்தது. ஆடம்பரமாகவும், நல்ல பேஷனாகவும் அணிய வேண்டும் என்பதற்காக தலையில் மெல்லிய துணிகளை தவிர்த்து நாம் அணியும் புர்க்காவும், தலைதுணியும் மறுமையில் நமக்கு வெற்றியைத்தருமா? என்பதை கவனத்தில் கொண்டு ஹிஜாப் அணிவதே சிறப்பானது. அடுத்தவர்கள் நன்றாக இருக்கிறது என்று பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அணிவது நமக்கு நன்மையை பெற்றுத்தராது.
இஸ்லாம் மனிதர்கள் எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக நமக்கு கற்றுத்தந்துள்ளது. வெட்கம் என்பது மனிதர்களுக்கே உரிய உயர்ந்த பண்பாகும். நடை, உடை, பழக்கவழக்கங்களில் வெட்கமின்றி செயல்படுவதை தடை செய்துள்ளது.
ஒரு சதோரர் நல்ல வேலையில் இருக்கிறார். தொழுகையாளியாகவும் இருக்கிறார். நான் சில வருடங்களுக்கு முன் பார்க்கும்பொழுது புர்க்காவுடன் சென்ற இவரின் துணைவியார்; ஒரு நாள் புர்க்கா, தலைதுணி இல்லாமல் கணவரோடு வெளியில் செல்கிறார் திடீரென்று புர்க்காவுடன் செல்கிறார்.(ஒரு நாள் புர்க்கா, ஒரு நாள் புர்க்கா இல்லாமல் செல்வது இப்படித்தான் தொடர்கிறார்) என்ன கொள்கையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் விளையாட்டாக இவர்களால் பின்பற்றப்படுகிறது. இங்கு தன் மனைவியை கண்டிக்காதது யார் குற்றம், கணவர் குற்றம்தானே. ஐந்து வேளை தொழுதால் மட்டும் போதுமா?
பிற மதத்தில் இருந்து காலேஜில் படிக்கும் காலத்திலேயே இஸ்லாத்தை நன்றாக புரிந்து ஏற்றுக்கொண்ட சகோதரியை எனக்கு தெரிந்த சகோதரர் மணமுடித்து வளைகுடாவில் வாழ்ந்து வருகிறார். இந்த சகோதரி அணியும் ஹிஜாப் நமது பெண்களையே அசர வைக்கும் அளவுக்கு மிக பேணுதலாக அணிந்து செல்கிறார். இஸ்லாத்தை பல தியாகங்கள் புரிந்து ஏற்றுக்கொண்டவர்களுக்குத்தான் இஸ்லாத்தின் மதிப்பு தெரியும். பரம்பரை இஸ்லாமியர்களுக்கு உண்மையான இஸ்லாத்தை பின்பற்றுவதில் தயக்கம், அலட்சியம் இவைகளை காணமுடிகிறது. ஹிஜாபையே தயக்கத்தோடும், விளையாட்டகவும் அணியும் இவர்கள் மார்க்கத்தின் மற்ற அமல்களை சரியாக பின்பற்றுவார்களா?
வெளியூர்களிலும் சரி, வளைகுடா நாடுகளிலும் சரி, விமான நிலையத்திலும் சரி நமது இஸ்லாமிய பெண்கள் கடைபிடிக்கும் ஹிஜாப் பெயருக்காகவே இருப்பதை நான் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன். கணவர் கூடத்தான் வருகிறார்கள். புர்க்கா அணிந்திருப்பார்கள் தலைதுணி மட்டும் பெயருக்குத்தான் ஆனால் தலையில் இருக்காது. தலைமுடி, பூ முதல் அனைத்தும் வெளியில் தெரியும். இஸ்லாமிய ஆண்களுக்கு ஹிஜாபின் உண்மை காரணம் புரிந்திருக்க வேண்டும். கணவனுக்கு தெரிந்தால் அல்லவா? மனைவியை கண்டித்து ஒழுங்காக தலைதுணியை போடச்சொல்ல முடியும்.
அரபு நாட்டு பெண்கள் வேலை செய்யும் இடங்களில் மற்ற ஆண்களுக்கு நடுவில் அடிக்கடி தலைதுணியை பிரித்து சரிசெய்து கொள்கிறார்கள். அப்பொழுது அவர்களின் தலை திறந்திருப்பதை காண முடிகிறது. (நான் தொலைபேசி அலுவலகத்தில் கண்ட காட்சி) தனி இடத்திற்கு சென்று அவர்கள் சரி செய்து கொள்ளலாம் அல்லது ஹிஜாபிற்கு பின் போட்டு விட்டால் இப்படி சரி செய்ய வேண்டியதில்லை. யாரை குறை சொல்வது?
ஒரு பெண் எப்பொழுதும் தன்மானத்தோடும், கௌரவத்தோடும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப்பை பேணச் சொல்லி வலியுறுத்துகிறது.
ஹிஜாப் குறிப்பிட்ட நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை, எந்த நிறத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
வல்ல அல்லாஹ் என்ன கூறுகிறான்:
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31)
இந்த வசனத்தில் இருந்து பெண்கள் புர்க்கா அணியும்பொழுது முகம், கை தவிர அவர்களின் தலைதுணி தலை மார்பு பகுதி வரை மூடியிருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இப்பொழுது வரும் தலை துணிகள் தலையை மறைக்கவே போதாத அளவுக்கு மிக மெல்லியதாக வருகிறது. அதனால் புர்க்கா அணிந்திருந்தாலும் தலை, மார்பு பகுதியை மறைக்கும் அளவுக்கு கனமான துணிகளை பெண்கள் வாங்கி அணிந்து கொள்வது மிகச் சிறந்த நன்மையை பெற்றுத்தரும். புர்க்கா போட்டுள்ளோம் மார்பு பகுதியை மறைக்க வேண்டியதில்லை என்பது சிறந்த பண்பாக இருக்காது.
ஹிஜாபின் வரையறைகள்:
1) பெண்களின் முகம், மணிக்கட்டு தவிர முழு உடம்பையும் மறைக்க வேண்டும்.
2) புர்க்கா, தலைதுணி கனமானதாக இருக்க வேண்டும்.
3) பெண்களின் உடம்பை இறுக்கி பிடிப்பது போல் இருக்க கூடாது.
4) புர்க்கா தளர்வாக இருக்க வேண்டும் (இறுக்கமாக இருக்கக்கூடாது).
நிகாப் - முகத்திரை
நிகாப் என்பது கண்கள் இரண்டும் தெரியுமாறு முகத்தில் தொங்க விடும் துணிக்கு பெயர். நிகாப் கண்டிப்பாக போட வேண்டும், பேடாமல் இருக்கலாம் என்ற விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதோடு கையுறை, காலுறையும் அணிந்து செல்கிறார்கள். (இந்த நிகாப்தான் பிரான்ஸில் தற்பொழுது பிரச்சனையானது. நிகாப் போடக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். முஸ்லிம்களுக்கே பிரச்சனை வந்தது போல் சிலர் மெயில் குழுமங்களில் மெயிலை அனுப்பி கொண்டு இருந்தார்கள்).
ஆணாயினும், பெண்ணாயினும் சொந்த ஊரில் தவறு செய்ய தயங்க காரணம் சுற்றியுள்ள தெரிந்தவர்கள் முன்னால் தன் கண்ணியம் பறிபோய் விடும் என்ற அச்சத்தால்தான் (அல்லாஹ்வின் அச்சத்தில் அல்ல). தான் யார் என்று தெரியாத இடங்களில்தான் தவறிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் (விதிவிலக்கை மட்டுமே கூறுகிறேன்).
வெளியூர்களில் எந்த ஆணுடனும் நிகாப்புடன் (முகத்திரையுடன்) ஒரு பெண் சென்றால் அவனின் மனைவி என்று அறியப்படுவாள். முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தினால் விபரீதங்களுக்கு வழி வகுத்து விட காரணமாக அமைந்து விடும்.
முகத்தை மறைக்க கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்கள் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட முகம் மறைத்து தவறுகளைச் செய்யக் கூடிய நிலைமையும் ஏற்படலாம்.
சின்னத்திரை முதல் தவறு செய்யும் பெண்கள் வரை தவறிழைத்து விட்டு கைது செய்யப்படும்பொழுது - புர்க்கா அணிந்து (நிகாப்) முகத்திரையோடு வருவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்.
முகத்திரை அணிந்த பெண்கள் கடைத்தெருவில் நடமாடும்பொழுது மட்டும் பின்பற்றுகிறார்கள். கடைகளுக்கு உள்ளே சென்று விட்டால் முகத்திரையை அகற்றி விடுகிறார்கள். நானே நேரில் கண்ட காட்சி இது. கடைகளுக்கு உள்ளேயும் ஆண்கள்தான் இருக்கிறார்கள். பின் இந்த முகத்திரை யாருக்காக போடுகிறார்கள். கணவருக்காகவா? அல்லது இஸ்லாத்திற்காகவா? இல்லாத ஒன்றை கடைபிடித்தால் இந்த நிலைதான் ஏற்படும்.
பெண்கள் கடைவீதிகளுக்குச் செல்லும்பொழுதும் மற்ற நேரங்களிலும் கொடுக்கல், வாங்கல் மற்ற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட முடியாது. அதனால் முகம், கை தவிர்த்து மணிக்கட்டு வரை மறைத்திருப்பது போதுமானது.
ஆண்களின் ஹிஜாப்:
பெண்களுக்கு மட்டும்தான் ஹிஜாப் ஆண்களுக்கு ஹிஜாப் இல்லை எப்படியும் இருக்கலாம் என்று நினைத்து வாழும் ஆண்களுக்கு வல்ல அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை கவனமாக படித்து மனதில் வைத்துக்கொள்வது நன்மையளிக்கும்.
(முஹம்மதே) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 24:30)
ஒரு ஆண் ஒரு பெண்னை பார்த்தவுடன் அவனது மனதில் வெட்கமற்ற தவறான எண்ணம் தோன்றாமல் இருக்கவே பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறு வல்ல அல்லாஹ் கூறுகிறான். (இதுவே ஆண்களுக்கான ஹிஜாப்)
முதல் பார்வை சாதாரண பார்வை, இரண்டாவது பார்வை ஷைத்தானின் பார்வை ஆகவே மீண்டும் பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்பது நபிமொழி.
ஆகவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! தங்களின் ஹிஜாபை முழுமையாக அழகான முறையில் பேணி வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்று இம்மையிலும், மறுமையிலும் வெற்றி அடையுங்கள்.

0 comments:

Post a Comment